கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 1,381 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5ம் தேதி தொடங்கியது.

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23 இளநிலைப் பாடப்பிரிவுகளுக்காக மொத்தம் 1,727 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டதில், 150 இடங்களில் 77 இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள்  நடைபெற்றன.

இதன் மூலம் மொத்தம் 1,727 இடங்களில் 1,381 இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது 346 இடங்கள் காலியாக உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பி.எஸ்சி. உளவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பி.காம்., பி.காம். (சிஏ), பி.காம். சர்வதேச வணிகம், பிபிஏ, பொருளாதாரம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளன. சில பாடப்பிரிவுகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள் காலியாக உள்ளன.

தொடர்ந்து, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளைத் தவிர மற்ற பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.