மழைநீர் சேகரிப்பு திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த முன்னோடி திட்டங்களில் ஒன்று. 2001ல் அவர் அதை அறிமுகப்படுத்தி, அனைத்து வீடுகள், குடியிருப்புகள், அரசு கட்டிடங்களிலும் இந்த கட்டமைப்பு கட்டாயம் நிறுவப்படவேண்டும் என உத்தரவிட்டார்.
துவக்கத்தில் இதற்கு ஒத்துழைப்பு உடனே கிடைக்காமல் இருந்தாலும், மெதுவாக இதை மக்கள் ஏற்றனர். அதன் விளைவாக பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு மாறியது. மாநிலத்தில் வறட்சி பாதிப்புகள் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது.
கோவை மாநகராட்சி தரப்பில் தற்போது ஒரு முக்கிய கோரிக்கையை பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை கோவைக்கு மிகுந்த மழைப்பொழிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் இரண்டு மாதங்களில் கோவையில் பெருமளவு மழை பொழியும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டுக் கூரையில் சேரும் மழைநீரைச் சேமிக்க மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனவும், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கட்டிடங்களிலும் கட்டாயம் இந்த வசதி இடம்பெறவேண்டும் என கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைத்தவர்கள் அதைப் பராமரித்து, பழுதுகளைச் சரிசெய்து, புனரமைத்துத் தயார்படுத்தல் வேண்டும்.
இந்த அறிவுரையைப் பின்பற்றி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்கி, மழைநீரை வீணாக்காமல் சேமிக்க முயற்சிக்க வேண்டும். இப்படிச் சேமிக்கும் மழைநீர் நிலத்தடி நீர்மட்டத்தை நன்கு உயர்த்தும். அதுபோல நம் கிணறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பும் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றும் மாநகராட்சி தரப்பில் வெளிவந்துள்ளது.

