கோவை – சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலை 16 பெட்டிகளுடன் இயக்குவது குறித்து பரிசீலிக்குமாறு பயணிகள் தெற்கு ரயில்வேயை வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் என ஐந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை – சென்னை வந்தே பாரத் எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
கடந்த 2023 ஏப்ரல் மாதம் கோவையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 20643/20644) தொடங்கப்பட்டது. இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக இயங்காது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை காலை 11.50 மணிக்கு சென்றடைகிறது. மறுமர்க்கமாக சென்ட்ரலில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. ஒரே நாளில் குறைந்த நேரத்தில் பயணிக்க முடிவதால், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பும் உள்ளது. இதனால் முன்பதிவு செய்து, இடம் கிடைப்பதில் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தற்போது எட்டு பெட்டிகள் உள்ள நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, பெட்டிகளின் எண்ணிக்கையை 16 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.