அனைவரையும் அனுசரித்து செல்லாமல் இருந்தால் அதிமுக எப்படி பலப்படும், எப்படி தேர்தலை சந்திக்கமுடியும் என கட்சி தலைமையை நோக்கி முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் பல தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் விரைவில் இடைத்தேர்தல் வரும் என கூறப்படுகிறது.  இப்போதைய நிலைமையில், திமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் உள்ளன. அதிமுக-வில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மற்றும் பல நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சி தலைமை மேல் அதிருப்தியில் பல மூத்த தலைவர்கள்/முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர். இதில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவல் பூகம்பமாக வெடித்து கட்சியில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரவிமனோகரனின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, த.வெ.க. ஆட்சி அமைய அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏன் ஆதரவு கொடுத்தனர் என்பது பற்றி பேசியுள்ளார்.

நவம்பரில் வழக்கமாக நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் மாதத்திலேயே கூட்டப்படவுள்ளதாக கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டதற்கு, ஏற்கனவே சுமார் 200 பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கி உள்ளனர். ஒரே கருத்தை தான் பொதுக்குழு கூடுகளில் பேசவேண்டும் என்றெல்லாம் கூறுவது பிரயோஜனப்படாது. பொதுக்குழு கூட்டத்தில் தோல்விக்கான காரணத்தை ஆராயவேண்டும், அனைவரின் கருத்தை கேட்கவேண்டும் என வேலுமணி கூறினார்.

” த.வெ.க. இன்று ஆளும் கட்சியாக உள்ளனர்.  திமுக இன்று எதிர்க்கட்சி ஆகிவிட்டனர். மூன்றாம் இடத்தில் இன்று அதிமுக உள்ளது. நாங்கள் முதலில் பிரிந்து வந்து எதற்கு த.வெ.க.வுக்கு ஆதரவு தந்தோம்? திமுக உடன் (எடப்பாடி) போக திட்டமிட்டதால் தான் நாங்கள் த.வெ.க.விற்கு ஆதரவளித்தோம். திமுக எங்கள் எதிரிக்கட்சி. அதை எதிர்த்து தலைவர் (எம்.ஜி.ஆர்.) ஆரம்பித்து அம்மா ( ஜெயலலிதா) நடத்திய கட்சி இது. அதனால் தான் ஆதரவு கொடுத்தோம். நாங்கள் அதிமுக-வில் உறுப்பினர்களாக இருந்து செயல்படுவோம், எங்கள் எம்.எல்.ஏ பணிகளை கவனிப்போம்,” என கூறினார்.

கட்சியை வளர்த்த நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவே உள்ளதை சுட்டிக்காட்டிய வேலுமணி, எல்லோரையும் அனுசரித்து செல்லாவிட்டால் எப்படி கட்சி நாளை வெல்லும்? எப்படி அதை பலப்படுத்த முடியும்? எப்படி தேர்தலை சந்திப்பது? என கேள்வி எழுப்பினார்.