ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் நிதி உதவியுடன் இந்தியத் தத்துவ ஞானிகள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசிய கல்லூரி முதல்வர் சித்ரா, மனவள மேம்பாட்டில் கவனம் செலுத்தி மனித வாழ்வை மேன்மையடையச் செய்வதில் நம்நாடு தொன்றுதொட்டு வழிகாட்டி வருகிறது. மனித குலத்திற்கு வழிகாட்டும் மனவளச் சிந்தனைகளை இளம்பருவத்திலேயே மாணவிகள் அறிந்து கொள்வதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மனவலிமை கொண்டவர்களாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக் குழும உறுப்பினர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்தியத் தத்துவ மரபுகளின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் வல்லுனர்கள் பங்கேற்று ஸ்ரீ அரவிந்தர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்தியத் தத்துவஞானிகளின் சிந்தனைகள், சமூகப் பங்களிப்புகள் மற்றும் இன்றைய கல்வியில் அவற்றின் பயன்பாடு குறித்து விரிவாகப் பேசினர்.
