சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் கடந்த சில மாதங்களாக, தேங்காய் பால் விற்பனை பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முழுவதுமே இந்த தேங்காய் பால் ஆக்கிரமித்து இருந்தன. விளையாட்டு மைதானம், நடைபயிற்சி செய்யும் இடங்களில் இதன் விற்பனை மிகவும் ஜோராக நடைபெறுவதை பார்க்க முடிகிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க மக்கள் பல்வேறு இயற்கை பானங்களை நாடி வரும் நிலையில், தற்போது அதில் தேங்காய் பாலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
சாதாரணமாக வீடுகளிலேயே இதை தயாரிக்க முடியும் என்றாலும், இதற்கு சற்று மெனக்கேடலும் தேவைப்படுகிறது. இதனால் தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் தேங்காய் பாலை மக்கள் அதிகமாக விரும்பி, வாங்கி குடித்து வருகின்றனர். இளநீரைப் போலவே, தொண்டைக்கு இதமாக இருப்பதால்,
இதற்கு மவுசும் கூடிவிட்டது. உடலுக்கு இது குளிர்ச்சியை தந்தாலும், தொடர்ந்து குடிப்பது உடலுக்கு நல்லதா என்ற சந்தேகமும் இருக்கிறது.
தேங்காய் பாலில் வைட்டமின்கள் சி, இ, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
இதில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலுக்கு தினசரி தேவையான அளவில் சுமார் 25 சதவிகிதம் வழங்கும் என கூறப்படுகிறது. அதேபோல வறண்ட சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனை உள்ளவர்களுக்கு தேங்காய் பால் குடிப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அதேபோல் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.
ஆனால், தேங்காய் பால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதில் 80 முதல் 90 சதவிகிதம் வரை நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் சிறுநீரக பிரச்சனை, உடல் பருமன் அல்லது பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இதில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால், நீண்ட காலத்திற்கு குடிப்பது சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கெனவே உடல்நலக் குறைபாடுகளுக்காக மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வோர், தேங்காய் பால் குடிக்கும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
குறிப்பாக தேங்காய் பாலின் அளவிலும் கவனம் தேவை. தினமும் 50 முதல் 100 மில்லி வரை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. தெருவோரங்களில் தினமும் டம்ளர் கணக்கில் குடிப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
