கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் எனக் கோரி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் அதிகாரிகள் மெத்தனமான போக்குடன் செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.
தர்ணா போராட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வேட்பாளர் அம்மன் அர்சுணன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது புகாரை மனுவாக அளித்தார். அவர் மனு அளிக்கச் சென்றபோதிலும், அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற அராஜகம் எப்போதும் நடந்ததில்லை. கோவை தெற்கு தொகுதியில் மிக அதிக அளவில் அட்டூழியங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதையும், இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். காவல்துறை தரப்பிலும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.
பணப்பட்டுவாடா நடைபெறும் போது அதில் ஈடுபட்டவர்களை நாங்கள் பிடித்து ஒப்படைத்தாலும், தேர்தல் அதிகாரிகள் அவர்களை விடுவித்து விடுகின்றனர். இது மிகவும் கவலைக்கிடமானது.

கரூரைச் சேர்ந்த 18 சுயேட்சை வேட்பாளர்கள் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். தொகுதி தற்போது கலவர நிலையை ஒத்துள்ளது. தேர்தல் ஆணையம் இதை பார்த்தும் காணாதது போல செயல்படுகிறது.
தேர்தல் பொறுப்பில் உள்ள அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களிடம் புகார் அளித்தபோதும், “பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாகவும் குற்றம்சாட்டினார்.
பணம் வாங்கவில்லை என்றாலும் தாக்குதல்கள் நடக்கின்றன. பொதுமக்கள் திருமணம், மருத்துவ செலவுகள், அன்றாட தேவைகளுக்காக பணம் எடுத்துச் சென்றாலும், பறக்கும் படையினர் தடுத்து விசாரிக்கின்றனர்.
கோவையில் உள்ள ஒரு லாட்ஜில் கரூரைச் சேர்ந்த திமுக ஆதரவாளர்கள் தங்கி உள்ளனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் பணம் கூட மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் அவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது.
இங்கு நடப்பது ஜனநாயகமா, சர்வாதிகாரமா? அடால்ஃப் ஹிட்லர், பெனிடோ முசோலினி போன்ற ஆட்சி நடைபெறுகிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, இந்த சூழ்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் கேட்டும் இதுவரை பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
