கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூர் பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இதனுடன் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முறையான திட்டமிடல், செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண், நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு கூறுகையில்: காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம், இது தான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம் எனக் கூறினார்.