சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27) 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா கடலூர் அருகே அமைந்துள்ள ஈஷா காவேரி கூக்குரல் நர்சரியில் நடைபெற்றது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் 1.20 கோடி எனும் நடப்பாண்டு இலக்கை எட்டும் வகையில், மாவட்ட வாரியாகவும் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 4.75 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா சின்னக்கட்டுசாகை ஈஷா உற்பத்தி நாற்றுப்பண்ணை வளாகத்தில் நடைபெற்றது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ராஜ்குமார், மாவட்ட வன அலுவலர் குருசுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு, கடலூர் மாவட்டத்திற்கான மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் அமைச்சர் ராஜ்குமார் பேசுகையில், உலக மக்களின் நல்வாழ்விற்காகச் சத்குரு மோட்டார் சைக்கிளிலேயே உலகெங்கும் பயணித்து, மண் வளம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கும் இந்த நர்சரிக்கும், இங்கே பணிபுரிகின்ற விவசாயத் தோழர்களுக்கும், பெண்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், என்னிடம் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ‘எந்தவொரு ஊழலும் இருக்கக் கூடாது, மக்களுக்கு நன்மை மட்டுமே செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ஆகையால், இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் என்ற முறையிலே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு என்னென்ன தேவையோ, அத்தனையையும் செய்யத் தயாராக இருக்கிறேன் எனக் கூறினார்.
