ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 120 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் முடிவு செய்துள்ளது.

ஆயுத பூஜை வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதனால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 120 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவையில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், தொலைதூர ஊர்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.