தமிழக முதலமைச்சர் விஜயை, சைமா பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க கோரிக்கை விடுத்தனர்.
சைமா முன்னாள் தலைவர்கள் ராஜ்குமார், ரவி சாம், அஷ்வின் சந்திரன், சைமா துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், உபதலைவர் சிவராஜ், பொதுச் செயலாளர் செல்வராஜூ ஆகியோர் தமிழக முதலமைச்சரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், ஜவுளித் துறையை கடுமையாக பாதித்து வரும் பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குமாறு பிரதமருக்கு டி.ஓ. கடிதம் அனுப்பியதற்காக சைமா சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக ஜவுளித் துறையின் தற்போதைய நிலை, அதன் போட்டித்திறனை நிலைநிறுத்த வேண்டிய அவசியம், மற்றும் துறையின் வளர்ச்சி திறனை முழுமையாக பயன்படுத்த தேவையான முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும் மின்சார கட்டண உயர்வு மற்றும் மாற்று எரிசக்தி தொடர்பான சில நடைமுறைகள் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
முதலமைச்சரிடம் சைமா குழு வைத்த கோரிக்கைகள்
- மேற்கூரை சூரிய மின்சார உற்பத்திக்கான நெட்வொர்க் கட்டண வசூலை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திரும்பப் பெற வேண்டும்.
- APTEL இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை “Deemed Demand Charges” நிலுவைத் தொகை வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்.
- தற்போதைய ரூ.608 / KVA / மாதம் என்ற தேவை கட்டணத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமின்றி தொடர வேண்டும்.
மேலும், பி.எம். மித்ரா பார்க் திட்டம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒத்துழைப்பையும் வழங்குமாறு சைமா பிரதிநிதிகள் குழு கோரிக்கை வைத்தனர்.
