கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூல் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்குக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர் நா. பழனிசாமி தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் இந்து முருகேசன் வரவேற்புரை வழங்கினார்.

ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநர் கவிதாசன் நூல் குறித்த அறிமுகவுரையில் பேசியதாவது: பொறியியல் மாணவர்கள் நுட்பமான முறையில் சோர்வின்றி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். தங்களின் கண்டுபிடிப்புகளில் தோல்விகள் ஏற்படுமாயின் அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்து மீண்டும் முயற்சிசெய்ய வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ என்னும் இந்நூல் திகழ்கிறது. மாணவர்கள் அனைவரும் இந்நூலை அவசியம் படித்து தெரிந்துகொள்வது அவசியம் என்று எடுத்துரைத்தார்

நூலாசிரியர் டில்லிபாபு சிறப்புரையில், நூலின் சிறப்பம்சங்கள், ராணுவ அறிவியல், பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மாணவர்கள் தங்களின் புதிய சிந்தனையை உருவாக்கம் செய்யும்பொழுது பல்வேறு தோல்விகள் ஏற்படலாம். எனினும் அம்முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றிபெறலாம் என்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சுப்ரதோ தாஸ், கோவை விஜயா பதிப்பகத்தைச் சேர்ந்த வேலாயுதம், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.