கோவை, எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்கங்கள் குறித்து இருநாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

எஸ்.என்.எஸ். குழுமத் தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நளின் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மாநாடு நடைபெற்றது.

தொடக்க விழாவில், ஆக்சென்ச்சர் நிறுவன நிர்வாக இயக்குநர் பால் சுந்தர் சிங் முதன்மை விருந்தினராகவும், கனடாவின் யார்க்வில் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்ரீராம் அனந்தன் கௌரவ விருந்தினராகவும், மலேசியாவின் இன்டி சர்வதேச பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியர் அன்வர் பாஷா சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.

கல்லூரி முதல்வர் சார்லஸ் தலைமை உரையாற்றினார். இயக்குநர் அருணாசலம், நிர்வாக இயக்குநர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து, மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழகக் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் 513 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மதிப்பாய்வுக்குப் பின் 196 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, ஸ்கோபஸ் குறியீட்டுப் பதிப்பக வெளியீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எட்டு தொழில்நுட்பப் பிரிவுகளில் நடைபெற்ற மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், இணையத் தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

நேரடி மற்றும் இணையவழியில் நடைபெற்ற மாநாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் நேரில் பங்கேற்றனர். 900-க்கும் மேற்பட்டோர் இணையவழியில் கலந்துகொண்டனர்.