மேட்டுப்பாளையத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு, பவானி நதிக்கரையில் அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி நதிக்கரையில் பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் அனைத்து இந்து சமுதாய நந்தவனம் அமைந்துள்ளது.

காசிக்கு நிகராக பார்க்கப்படும் இந்த நந்தவனத்தில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையும். அவர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையை ஒட்டி அதிகாலை முதலே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நந்தவனத்தில் காத்திருந்து பவானி நதிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.

ஆடி அமாவாசை என்பதால் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்கள் வசதிக்காக தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தனி கவுண்டர்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

நந்தவனத்தில் அர்ச்சகர்களை கொண்டு காய்கறிகள், பின்டம் வைத்து தங்கள் மூதாதையர்களுக்காக  படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி, பின்னர் பிண்டம் பவானி ஆற்றில் கரைக்கபட்டு வருகிறது.

காலை முதல் நந்தவனத்திற்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.