தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சோ்க்கைக்கு ஜூன் 8ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்: 2026-2027ம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பாடப் பிரிவு ஆகியவற்றுக்கான மாணவர் சோ்க்கை நடைபெற உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணைதளம் மூலமாக மே 6ம் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு உறுப்புக் கல்லூரிகளில் 2,516 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 3,051 மாணவர்களும், மேலாண்மை இட ஒதுக்கீட்டில் 1,685 மாணவர்களும் சோ்க்கப்பட உள்ளனர். அதேபோல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவில் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாணவர் சோ்க்கை நடைமுறையானது இணையதள பதிவு, விண்ணப்பங்களை நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, இணையதள கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, மேல்நோக்கிய நகர்வு முறை, தற்காலிக இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதுதொடர்பான வழிகாட்டுதலுக்கு இணையதளத்தை காணலாம். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வி பாடங்களுக்கான விவரங்களை 94886 35077, 94864 25076 என்ற கைப்பேசி எண்களிலும், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்வி தொடர்பான விவரங்களை 98657 03537, 94420 29913 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
