கோவை விமான நிலையம் விரிவாக்கும் திட்டத்துக்காக, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்ள ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க, இந்திய விமான நிலைய ஆணையம் டெண்டர் அறிவித்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இடையே, ஆவணங்கள் அடிப்படையில் நிலங்களை முழுமையாக ஒப்படைக்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும்   இதற்கிடையில், விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாஸ்டர் பிளான் இறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, புதிய டெர்மினல் கட்டிடம், விமானங்கள் நிறுத்தும் இடங்கள், பலதள வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களை மதிப்பீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து அனுமதி பெற, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இதற்காக தகுதியான ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க, இந்திய விமான நிலைய ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க கடைசி தேதி 2026 ஜனவரி 1, பிற்பகல் 4 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர்கள் 2026 ஜனவரி 2 அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.