ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய துணைவன் போர்டல் செயல்முறை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.

இதில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் துணைத் தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கௌரவத் தலைவருமான சக்திவேல் பேசியதாவது: துணைவன் போர்டல் திருப்பூரில் தான் முதன் முதலில் அமல்படுத்தபட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் விஜய கிருஷ்ண வேலவன் ஐ.ஆர்.எஸ்.

துணைவன் போர்டல் கடந்த மாதம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.  ஏற்றுமதியாளர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.  துணைவன் போன்ற தளங்கள் திறமையான சேவை வழங்கலை உறுதி செய்வதிலும், நடைமுறை தாமதங்களைக் குறைப்பதிலும், வர்த்தக போட்டித்தன்மையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனப் பேசினார்.

திருச்சிராப்பள்ளி, கூடுதல் ஆணையர் சுங்கம், விஜய கிருஷ்ண வேலவன் ஐ.ஆர்.எஸ், துணைவன் போர்ட்டலின் அம்சங்கள், செயல்பாடுகள் குறித்தும் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் ஆவணங்களை இணக்கும் செயல்முறைகளை பற்றியும் விளக்கக்காட்சி முலம் தெளிவுபடுத்தினார். பங்கேற்பாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் சுப்பிரமணியன், துணைவன் போர்டல் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளித்த AEPC மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்த பயிலரங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.