கங்கா மருத்துவமனை மற்றும் ஸ்மைல் ட்ரெய்ன் இந்தியா ஆகியவை இணைந்து உலகப் புன்னகை தினத்தை கோவை ரயில் நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடின.
புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயில் சுவிஸ் இன்ஜின் பொருத்தப்பட்ட இடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிர வைக்கப்பட்டன.
அண்ணப்பிளவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு ஸ்மைல் ட்ரெயின் டிஜிட்டல் புகைப்பட ஆல்பத்தில் பதிவேற்றப்பட்ட படங்கள் அதிக புன்னகைக்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, அண்ணப் பிளவுகளுடன் பிறந்த குழந்தைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக சக்திவாய்ந்த அடையாளங்களை காட்சிப்படுத்தும் வகையில் வண்ண விளக்குகள் மூலம் ஒளிரச் செய்யப்பட்டன.
இது குறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், ஸ்மைல் ட்ரெய்ன் திட்ட இயக்குனருமான டாக்டர் ராஜ சபாபதி கூறுகையில், இந்த குறிப்பிடத்தக்க உலகளாவிய முன்முயற்சியில் பங்கேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அண்ணப் பிளவு விழிப்புணர்வை அதிகரிக்க புகழ்பெற்ற கோவை ரயில் நிலையத்தை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்துள்ளோம். இந்த வெளிச்சங்கள் நம்பிக்கையையும் வலிமையையும் பிரதிபலிக்கின்றன. மேலும் ஸ்மைல் ட்ரெயினுடனான எங்கள் ஒத்துழைப்பின் மூலம், உதடு பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.