கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களிலும் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்கும் பணிகளும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இருண்ட பகுதிகளில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும் மாநகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 1,03,630 தெருவிளக்குகள் அமைந்துள்ளன. இவற்றில் பழுதடைந்த விளக்குகளைச் சரிசெய்வதுடன், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகள் மற்றும் இருள் சூழ்ந்த இடங்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிதாக தெருவிளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வடக்கு மண்டலத்தில் 1,103, கிழக்கு மண்டலத்தில் 1,169, மேற்கு மண்டலத்தில் 1,155, தெற்கு மண்டலத்தில் 1,302, மத்திய மண்டலத்தில் 995 என மொத்தம் 5,724 தெருவிளக்குகள் ரூ.6.12 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், இதுவரை 2,476 தெருவிளக்குகள் மாநகராட்சிக்கு வந்துள்ளன. மீதமுள்ள விளக்குகள் இந்த வார இறுதிக்குள் பெறப்பட உள்ளன. தற்போது பெறப்பட்ட விளக்குகளில் 1,805 விளக்குகள் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள விளக்குகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் பொருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட லாலி ரோடு முதல் வடவள்ளி வரையிலான பகுதியில் ஏற்கனவே உள்ள 312 பழைய தெருவிளக்குகளை ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுந்தராபுரம் முதல் மதுக்கரை சாலை வரையிலான மையத்தடுப்புப் பகுதியில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் 178 புதிய மின்கம்பங்கள் மற்றும் 356 தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.
மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தெருவிளக்குகளைச் சீரமைத்து, தேவையான இடங்களில் புதிய விளக்குகளை அமைப்பதன் மூலம் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பான நடமாட்டத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
