தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை (மேதமை) மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற நெல் நடவு விழா, பல்கலைக்கழகத்தின் நன்செய் பண்ணையில் நடைபெற்றது.
வேளாண் மாணவர்கள் வகுப்பறையில் கற்ற அறிவியல் தொழில்நுட்பங்களை நேரடியாக வயலில் செயல்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் சேற்றுழவு, நாற்று நடவு, உர மேலாண்மை, நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சாகுபடிப் பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டு, இறுதியில் அறுவடை வரையிலான அனுபவத்தைப் பெற உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, நன்செய் பண்ணையில் மாணவர்கள் நெல் நடவுப் பணியைத் தொடங்கினர். முன்னதாக, உழவியல் துறை பேராசிரியரும் தலைவர் கிருஷ்ணன், நெல் சாகுபடியில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு மேலாண்மை முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்கலைக்கழகப் பதிவாளர், துணைவேந்தர் (பொறுப்பு) ரவீந்திரன், நெல் நடவு விழாவைத் தொடங்கி வைத்தார். மேலும், வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் பாபு, பயிர் மேலாண்மை இயக்குநர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வயலில் இறங்கி மாணவர்களுடன் இணைந்து நெல் நாற்றுகளை நடவு செய்தனர்.
