கோவை கொடிசியா அரங்கில், பிளாஸ்டெக் எக்ஸ்போ மற்றும் வேஸ்டெக் எக்ஸ்போ இன்று துவங்கியது. வரும் 29-ம் தேதி வரை 3 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.
இதனை கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கத்தின் தலைவர் தேவகுமார், கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் மதிவண்ணன் ஆகியோர், தொழில்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

அகில இந்திய பிளாஸ்டிக் தொழில்கள் சங்கம், அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், கர்நாடக மாநில பாலிமர்கள் சங்கம் மற்றும் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் கண்காட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கத்தின் தலைவர் தேவகுமார் பேசியதாவது: பிளாஸ்டிக் பொருட்களை கையாள்வது சமுதாயத்துக்கும் இன்றையை தொழில் முனைவோருக்கும் பெரிய சவாலாக உள்ளது. இந்த கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி பிளாஸ்டிக்கை எவ்வாறு கையாள்வது? வேஸ்ட் பிளாஸ்டிக்கை எவ்வாறு ரீசைக்கிள் செய்வது போன்ற விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தை சரியான முறையில் கையாளும் பொழுது, தொழில்துறை இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். பிளாஸ்டிக்கை தவிர்ப்பது என்பது முடியாது. சிறு நிறுவனம் நாள் ஒன்றுக்கு 20 முதல் 50 கிலோ வரை உபயோகப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் பிளாஸ்டிக் வேஸ்டுகள் உருவாகின்றன.

மத்திய மாநில அரசுகள் நிறைய முயற்சி செய்து அதற்கு தேவையான சலுகைகள் தருகின்றார்கள். நிறுவனங்கள் அதை முறையாக பயன்படுத்தி பிளாஸ்டிக் வேஸ்டுகளை ரீசைக்கிள் செய்யும் பொழுது, மாசுகள் குறையும்.

கோவிட் தொற்றுக்கு பின் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாகி விட்டன, காரணம் பேக்கடு ஃபுட்ஸ் முதல் அனைத்திற்கும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாக உள்ளது. அதை குறைக்க முயற்சிக்க வேண்டும். தற்போது உள்ள பிளாஸ்டிக்குகளை கையாள்வதற்கு இந்த வேஸ்ட் மேனேஜ்மென்ட் கண்காட்சி மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
