வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நவம்பர் மாதத்திற்கான பிரம்மாண்ட முழு நிலவான ‘பீவர் சூப்பர் மூன்’ இன்று வானில் தோன்றுகிறது. இந்திய நேரப்படி இரவு 8.23 மணிக்கு நிலவு முழுமையான ஒளியுடன் காட்சியளிக்க உள்ளது.
பூமியைச் சுற்றி வரும் நிலவு, தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது முழு நிலவு நிகழ்வும் இணைந்து ஏற்பட்டால் அது ‘சூப்பர் மூன்’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று நிலவு பூமியிலிருந்து சுமார் 3,60,768 கி.மீ. தொலைவில் அமையவுள்ளது.
இதனால் வழக்கமான முழு நிலவை விட நிலவு சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசத்துடனும் தென்படும் எனக் கூறப்படுகிறது. வானம் தெளிவாக இருந்தால் இந்த அரிய காட்சியை வெறும் கண்களாலேயே ரசிக்கலாம். தொலைநோக்கி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை.
நவம்பர் மாத முழு நிலவு பாரம்பரியமாக ‘பீவர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 23, ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 20 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த சூப்பர் மூன் நிகழ்வுகள் நிகழ உள்ளது.
ப்ளூ மூன் என்றால் என்ன?
நிலவு நீல நிறத்தில் காட்சியளிப்பதால்தான் ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது என்பது தவறான புரிதல். பொதுவாக ஒரே ஆங்கில மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் தோன்றும்போது, இரண்டாவது முழு நிலவு ‘ப்ளூ மூன்’ என அழைக்கப்படுகிறது.
