ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விழா நடைபெற்றது.
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தமிழ்நாடு அரசு, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவிற்குக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் ‘மை பாரத்’ தளத்தின் மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகதீஷ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.
நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், நாடகம், ஓவியம், கவிதை மற்றும் பிபிடி ஆகிய பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
‘வளர்ச்சியடைந்த பாரதத்தின் சவால்கள்’ என்ற மையக்கருத்தில், ‘நீலப் பொருளாதாரம், மனிதவள மேம்பாடு மற்றும் உலகளாவிய போட்டித்திறன்’ என்ற தலைப்பில் பிபிடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது புதுமையான சிந்தனைகளையும் கருத்துகளையும் வழங்கினர்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் புவனேஸ்வரி, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் அறிவழகன், மேகனா, பிரபா ஆகியோர் போட்டிகளுக்கு நடுவர்களாகக் கலந்துகொண்டனர்.
