கோவை, எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் 2026ம் ஆண்டிற்கான மாபெரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ‘நட்பே இணைந்திடு’ என்ற தலைப்பில் நடைபெற்றது.

இதில், பல்வேறு துறைகள் மற்றும் வெவ்வேறு கல்வியாண்டுகளைச் சேர்ந்த 245 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், சென்னை ஹியூரிஸ்டிக் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயற்கை நுண்ணறிவு அதிகாரி  கார்த்திகேயன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவர், கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் 2006-2010ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் ஆவார்.

மேலும், ஸ்வீடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பாதுகாப்புத் தீர்வுகள் பொறியாளராக பணியாற்றும் அருண் பிரகாஷ் ஜோதிமணி மற்றும் சென்னை டெலாய்ட் கன்சல்டிங் நிறுவன மேலாளர் இளமதி குப்புசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இவர்களும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.

முன்னாள் மாணவர்கள் தங்களது தொழில்முறை வளர்ச்சி, சாதனைகள் மற்றும் கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி, எஸ்.என்.எஸ்., குழுமத்தின் தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.