தீபாவளி என்பது இனிப்பு, பலகாரம் சாப்பிட்டுவிட்டு பட்டாசுகளை வெடித்ததோடு நிறைவு பெறாமல், நாம் உருவாக்கிய குப்பைகளை நாமே அகற்றி பொது அக்கறையுடன் நிறைவு பெற்றால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு பணியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோவை மாநகரில் நிகழ்த்தி, காண்போரை உற்சாகப்படுத்தி உள்ளனர். கோவை சரவணமப்பட்டி அருகே தீபாவளி கொண்டாடிய ஊர் மக்கள், அன்று இரவே தங்களது பகுதியை சுத்தமாக வைக்கவேண்டும் என முடிவு செய்து, ஒன்றிணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊர் மக்கள் கூறுகையில், “நாங்கள் ஏற்படுத்திய குப்பைகளை நாங்களே அகற்றவேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் விதைக்க அனைவரும் ஒன்று திரண்டு இந்த தூய்மை பணியை செய்தோம்.”
“தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை தினம் என்பதால் எப்படியும் எல்லா இடங்களிலும் தூய்மை பணி நடைபெறும் போது பணிச்சுமை வழக்கத்தை விட தூய்மை பணியாளர்களுக்கு அதிகம் ஏற்படும். எனவே எங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யவும், ஒரு சமூகமாக அனைவரும் ஒன்றாக செயல்பட கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை பயப்படுத்திக்கொண்டோம்.”
இவ்வாறு கூறினர்.

