கோவை மாநகரம் திருச்சி ரோடு – அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு எதிரே மாநகராட்சி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதில் பயணிகள் நிற்குமிடத்தின் மேற்பரப்பில் மழைநீர் கசியாத அளவிற்கான திரை கூரையாக பொருத்தப்பட்டு உள்ளது. கீழே பயணிகள் அமர தனித்தனி இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பெய்த கனமழையில், மேற்கூரை திரையில் மழைநீர் தேங்கியது. நாள்கணக்கில் இவை தேங்கிய பகுதியிலேயே நின்று கொண்டதால் திரையின் ஒரு பகுதி வீங்கிய நிலையில் இருந்தது.
நேற்று மதியம் அந்த பகுதி மட்டும் கீழே தொங்கும் நிலைக்கு மாறத்துவங்கியது. இன்று (திங்கள்) காலை அது அதிகரித்துக்கொண்டே சென்றது. நிலைமை இப்படியே சென்றால், எதிர்பாராத நேரத்தில் திரை பலவீனமாகி, கிழிந்தால், அதிக கனத்துடன் மழைநீர் பயணிகள் மேல் விழக்கூடும். வயதானோர், சிறுவர்கள் மேல் விழுந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இது குறித்து அப்பகுதியில் உள்ள பயணிகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்ததும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையை லேசாக கீறிவிட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இதுபோல சம்பவங்கள் நிகழாமல் இருக்க மழைநீர் வெளியேற்றப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

