டாஸ்மாக் பணியாளர்களுக்கு நாளை (செப்டம்பர் 1) முதல் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது: கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி, மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ. 50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி, ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.
கள்ளச் சாராயத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்களும், புதிய வாகனங்களும் வழங்கப்படும்.
இ-கலால் இணையவழி செயலியில் ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் செயல்பாடுகள், ரூ.1.69 கோடி செலவில் முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.
கள்ளச் சாராயம், போலி மதுபானங்கள், போதைப் பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவதற்காக வழங்கப்படும் நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.
கள்ளச் சாராயம், போலி மற்றும் கலப்பட மதுபானங்கள், போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள், பொதுமக்களிடையே சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வலுவான மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கான அறிவிப்புகள்:
டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு செப். 1 முதல் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.486.90 கோடி அரசுக்கு செலவு ஏற்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ. 20,000 வழங்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ. 6,000 வழங்கப்படும்.
டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகளில் தூய்மைப் பணி, அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதற்காக மாதந்தோறும் மாநகர கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சிக் கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புற கடைகளுக்கு ரூ.3,000 சில்லரை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணிநேர பணி ஒதுக்கீடு, வாரம் ஒருநாள் விடுமுறை, மாதத்தில் இருநாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்புத் தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
