ஊழலுக்கு எதிராக ‘பூஜ்ய சகிப்புத்தன்மை’ கொள்கையைக் கடைப்பிடிக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு செயல்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய், பதவியேற்றது முதல் தொடர்ந்து கூறி கூறிவருவது, விரைவில் சோதிக்கப்பட உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு உரிமம் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை வரை விஜய் செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நடவடிக்கை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஒருவரையொருவர் கைது செய்த காலத்திற்குப் பிறகு, தமிழக அரசியலில் இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களைக் கைது செய்யும் அளவுக்குச் சென்றதில்லை.

1996-ல் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, ‘கலர் டிவி’ கொள்முதல் (கிராமப்புற பஞ்சாயத்துகளுக்காக சுமார் 45,000 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு) ஊழல் வழக்கில் ஜெயலலிதாவைக் கைது செய்தது.

அதேபோல், 2001-ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு, மேம்பாலத் திட்டங்களில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி கருணாநிதியைக் கைது செய்தது. பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, நில அபகரிப்பு வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஆனால், அவர்களுக்குப் பின்னர் முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டனர்.

இருவரும் அதிகாரத்தில் இருந்தபோது, ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், கைது நடவடிக்கை வரை செல்லவில்லை.
ஸ்டாலின் தலைமையிலான அரசு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளை நடத்தியது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் யாரெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்களோ, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த எழுதப்படாத அரசியல் மரபை முதலமைச்சர் விஜய் உடைத்துள்ளார்.
அன்பில் மகேஷ், திமுக குடும்பத்திற்கு நெருக்கமானவர் மட்டுமல்ல; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்துடன் மூன்று தலைமுறைகளாக நெருங்கிய உறவைக் கொண்டவர்.
அடுத்தது யார்?
தனது மேசையின் மீது மூன்று கோப்புகள் இருப்பதாகவும், அவற்றைத் திறக்க வைத்துவிட வேண்டாம் என்றும் முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “திறந்துதான் பாருங்கள்; எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை” என்று சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, “முதல் கோப்பைத் திறந்துவிட்டோம்” என்று ஆளும் தரப்பினர் இந்த நடவடிக்கையைப் பற்றிப் பேசி வருகின்றனர்.
அடுத்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு குறிவைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேபோல், தற்போதைய துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மீதும் கவனம் திரும்பக்கூடும் எனக் கூறப்படுகிறது.

டாஸ்மாக் தொடர்பான ஊழல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் மீண்டும் சவாலான காலம் தொடங்கலாம் என்கின்றனர் அரசியல் விவரங்களை அறிந்தவர்கள்.
திமுக மட்டும்தான் குறியா?
பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் இதேபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க மீண்டும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது அவருக்குப் பெரும் சவாலாக அமையலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை மட்டுமே விஜய் முழுமையாக நம்பியிருக்க முடியாது. பாமக அல்லது தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளன.
திமுக, முதலமைச்சர் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் இடம்பெறலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்.எல்.ஏ.வுமான வேலுமணி தலைமையிலான அணியினரே அவருக்குத் துணையாக நின்றனர். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் உருவானாலோ அல்லது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றாலோ, வேலுமணி தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு அவசியமாகத் தேவைப்படலாம்.
ஆனால், வேலுமணி மீது ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில முன்னாள் அமைச்சர்கள் அண்மையில் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் தாவியுள்ளனர்.
அன்பில் மகேஷைக் குறிவைத்துக் கைது செய்தது ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றால், இதே அளவுகோலைப் பின்பற்றி மற்றவர்கள் மீதும் முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது ‘அரசியல்வாதி விஜய்’ வேறு ஏதேனும் அரசியல் வியூகத்தைக் கையாள்வாரா? இதுதொடர்பான விவாதம், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் மேலும் சூடுபிடிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
