சமீப நாட்களாக வெள்ளலூர் குப்பைக்கிடங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வெளிவருகிறது. இதை பற்றி   மாசுக்கட்டுப்பாட்டு வரியம்  –  கோவை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் தெரிவிக்க அப்பகுதி மக்கள் முயன்ற போது, அழைப்பை அவர் ஏற்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக குப்பைக்கிடங்கை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கேட்டபோது, கடந்த ஒரு வார காலமாகவே குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் அதிக அளவில் வெளிவருகிறது. இரவு நேரங்களில் தூங்க முடிவதில்லை. காற்று இப்போது பலமாக வீசுவதால் சுற்றுப்பகுதிகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். காற்றின் திசைக்கேற்ப பரவும் இந்தத் துர்நாற்றம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதுடன், சுகாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து புகார் தெரிவிப்பதற்காகத் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அலைபேசியில் தொடர்புகொள்ளப் பலமுறை முயற்சி செய்தும், தொலைபேசி அழைப்புகளை ஏற்காமலும், எவ்விதப் பதிலும் அளிக்காமலும் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கடும் துர்நாற்றத்தால் அவதிப்படும் வேளையில், புகார்களைக் கேட்க வேண்டிய அதிகாரிகளே தொடர்புக்கு வராமல் இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

குப்பைக் கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைத் தடுக்க உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வு காண்பதுடன், பொதுமக்களின் புகார்களுக்கு அதிகாரிகள் பொறுப்புடன் பதிலளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் துறையும் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.