ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி “ஆசிரியர் தின விழா” கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

கோயம்புத்தூர் மண்டல பாஸ்போா்ட் அதிகாரி சதீஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆசிரியர் நிச்சயம் இருப்பார்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் எப்போதும் சரியான திசையை மட்டுமே காண்பித்து, வழிநடத்தக் கூடியவர்கள் என்றார்.

தொடர்ந்து, 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் கற்பித்தல், ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடுதல் மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் சிறந்து விளங்கி, முதல் மூன்று இடங்களைப் பிடித்த பேராசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

அதன்படி, முதலிடம் பிடித்த பி.எஸ்சி. சி.எஸ்.,சி.எஸ். துறை உதவிப்பேராசிரியர் கவிதா, இரண்டாமிடம் பிடித்த பி.எஸ்சி. சி.எஸ்.டி.ஏ. துறை உதவிப்பேராசிரியர் பிரனீஷ், மூன்றாமிடம் பிடித்த எம்.பி.ஏ. துறை உதவிப்பேராசிரியர் திவ்யா ஆகியோருக்கு சிறந்த ஆசிரியருக்கான கேடயம் வழங்கப்பட்டது. ரொக்கப்பரிசாக முறையே ரூ.15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

அதேப்போன்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த துறைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. அதன்படி, முதல் இடத்தை பி.எஸ்சி. சி.எஸ்.டி.ஏ துறையும், இரண்டாம் இடத்தை தகவல் தொழில்நுட்பவியல் துறையும், மூன்றாம் இடத்தை உயிரி தொழில்நுட்பவியல் துறையும் பிடித்திருந்தது. இத்துறைகளுக்குத் தலா ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் என்ற அளவில் ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.

மேலும், பேராசிரியர்களுள் தரவரிசையில் 4 முதல் 10 இடங்களைப் பெற்றவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, பி.எஸ்சி. சி.எஸ். துறை இணைப் பேராசிரியர் ஹேமலதா, பி.காம். பிஏ துறைத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பிசிஏ துறை இணைப் பேராசிரியர் தவமணி, பி.காம். ஐ.டி துறைத்தலைவர்  சசிகலா தேவி, பி.எஸ்சி. சி.எஸ்., சி.எஸ் துறை உதவிப் பேராசிரியர் ஜெய்தூன், பிசிஏ துறைத்தலைவர்  ஹரி பிரசாத், பி.எஸ்சி. சி.டி துறைத்தலைவர் சுமதி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.