கோவையில் பெய்த கனமழையால் தடாகம் சாலை, சோமனூர் பகுதியில் உள்ள வி.கே.வி அவென்யூ குடியிருப்புப் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்களின் பாதிப்புகளை கண்டறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டது. மேலும், இனிவரும் நாட்களில் மழை பெய்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகப்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்பகுதி மக்களின் கோரிக்கைகளான மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்.

பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மழைக்காலப் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.