கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை; பல்வேறு சாலைகளில் நீர்த்தேக்கம்… பணிகளை துரிதப்படுத்தும் மாநகராட்சி
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த வியாழன் முதல் துவங்கி, பல்வேறு மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவையில் வியாழன் மாலை பெய்த பேய் மழை, மாநகரத்தின் பல இடங்களில் சாலை போக்குவரத்தை பாதிப்புக்குளாக்கியது. மழைநீர் உடன் கழிவு நீரும் கலந்து சாலைகளை நிரப்பியதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வந்த கனமழை, ஞாயிறு மாலையும் மாநகரின் பல இடங்களில் கொட்டிதீர்த்தது.
கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்கிய விவரம் அறிந்து மாநகராட்சி தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களத்தில் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் இறங்கி ஆய்வு நடத்தி, மழைநீரை வெளியேற்றும் பணிகளை தீவிர படுத்தினார். இதுபோல மாநகரின் பிற இடங்களில் நடவடிக்கைகள் தொடர்கிறது.
அவிநாசி சாலையில் ‘அவதி’
கனமழை காரணமாக அவிநாசி சாலையின் பல இடங்களில் இன்று நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் இரு புறங்களிலும் மழைநீர் பெருமளவு தேங்கி இருப்பதால் சாலையை இயல்பாக பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் மழை நீர் வடிய தாமதம் ஆவது ஏன் என்பதை ஆய்வு செய்து இங்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

