தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் புதிய ரக ஜவுளிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதாக மண்டல மேலாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தீபாவளி விற்பனையையொட்டி, பெண்களுக்கான பிரிண்டட் குர்த்தீஸ், பாலிரயான் எம்பிராய்டரி குர்த்தீஸ், காட்டன் ஸ்லப் பிரிண்டட் குர்த்தீஸ், கலம்கரி குர்த்தீஸ், ஸ்ட்ரெய்ட் பேண்ட், சக்கரா பேண்ட் வித் கிராப் டாப், பலாசோ பேண்ட் வித் கிராப் டாப் செட், தோத்தி பேண்ட் வித் கிராப் டாப் உள்ளிட்ட புதிய ரக ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், சிறுமிகளுக்கான பட்டு பாவாடை சட்டைகள், புதிய வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், நைட்டிகள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கான லினன், ரிங்கிள் ஃப்ரீ, ஸ்லிம்ஃபிட் ரெடிமேட் சட்டைகளும் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.

கோவை நேரு ஸ்டேடியம், வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையம் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்ரீபாலமுருகன் விற்பனை நிலையங்களில், ‘பழசுக்கு புதுசு’ என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய, கிழிந்த பட்டுப் புடவைகளை மாற்றி, அவற்றுக்குரிய மதிப்பில் தங்களுக்குத் தேவையான வேறு ரகத் துணிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மாதாந்திர சேமிப்புத் திட்டம் ரூ.300 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 11 மாத சந்தாத் தொகையைச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, 12-வது மாத சந்தாத் தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகையுடன் துணிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படும். இவ்வாறு மண்டல மேலாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.