யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறையை தீபாவளி பண்டிகை முடியும் வரை ஒத்திவைப்பதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரூ. 2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வணிகர் தள்ளுபடிக் கட்டணத்தை (MDR) வசூலிக்கும் நடைமுறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ரூ. 3,000 மதிப்பிலான பொருள் அல்லது சேவையை யுபிஐ மூலம் வாங்கினால், வணிகருக்கு ரூ. 12 கட்டணமாக விதிக்கப்படும். அதேபோல், ரூ. 50,000 மதிப்பிலான பரிவர்த்தனைக்கு ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரூ. 75,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 300 உச்சவரம்புக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய வணிகர்கள், பண்டிகைக் காலத்தில் கூடுதல் கட்டணச் சுமை ஏற்படும் என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயுதபூஜை, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், புதிய கட்டண நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
வணிகர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகை முடியும் வரை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டண வசூல் நடைமுறையை அமல்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய நடைமுறை அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
