பி.கே. தாஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில், தொழில் நுட்ப அறிவும் தொழில்முறை பாதைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இந்திய விண்வெளித் துறைக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் நாட்டிற்கான மகத்தான சேவையைப் பாராட்டி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை பி.கே. தாஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் புரோ-சான்சலர் கிருஷ்ணகுமார் வழங்கினார்.

நம்பி நாராயணன் பேசுகையில்: இந்திய விண்வெளித் திட்டத்தில் தாம் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, விகாஸ் என்ஜின் உருவாக்கத்தில் தமது அனுபவங்களை எடுத்துரைத்தார்.

இளைஞர்கள் சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தங்களது மனம் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து, தங்களது கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது சமூகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதன் அடிப்படையில் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

எல் அண்டு டி நிறுவனத்தின், இணை பொது மேலாளர், ஏரோஸ்பேஸ், தலைவர் கிஷோரா ஷெட்டி, தனது நீண்டகால தொழில்துறை அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி மற்றும் விமானவியல் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு மேம்பட்ட பொருட்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்திய விமானவியல் சங்கம் சென்னை கிளையின் துணைத் தலைவர் பிரேம்குமார், இந்திய விமானவியல் மற்றும் விண்வெளித் துறையின் வளர்ச்சியில் இந்திய விமானவியல் சங்கம் ஆற்றிவரும் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் பி.கே. தாஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாகராஜா,  துணைப் பதிவாளர்  சூர்யகாந்த், நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் முதல்வர் சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.