திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சத்யபாமா, தி.மு.க. சுகன்யா, அ.தி.மு.க. பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லட்சுமணன், நாம் தமிழர் கட்சி கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
தொகுதியில் 186 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த 320 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்களில், 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி தாராபுரம் தொகுதியில் 80.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 89.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 9.65 சதவீதம் குறைவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இடைத்தேர்தல் என்பதால் பொதுத்தேர்தலைப் போன்ற ஆர்வம் இல்லாதது, வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் பலர் சொந்த ஊர் திரும்பி வாக்களிக்காதது, தேர்தல் நாளில் நிலவிய கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலைவிட இடைத்தேர்தல்களில் சராசரியாக 5 முதல் 10 சதவீதம் வரை வாக்குப்பதிவு குறைவது வழக்கமான ஒன்று என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், தாராபுரத்தில் பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதம் இடைத்தேர்தல் வரலாற்றுடன் ஒப்பிடும்போது அதிகமான வாக்குப்பதிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட 642 பேலட் யூனிட்கள், 321 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 337 வி.வி.பேட் இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் இரண்டு மேசைகளில் எண்ணப்படுகின்றன. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.
320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தை பொறுத்து, காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இறுதிக்கட்ட சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தால், முன்னிலை மற்றும் இறுதி முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு
எல்.ஆர்.ஜி. கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் கல்லூரி வளாகத்தை சுற்றிலும் மொத்தம் 64 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து இறுதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை, இந்த தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
அனைத்து 23 சுற்றுகளும் நிறைவடைந்து, தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு, தாராபுரம் தொகுதியின் இறுதி தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
