கோவை கங்கா மருத்துவமனையில் 12வது ஆண்டு ‘நிறுவனா் தின உரை’ சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோ என்டாலஜி மற்றும் ஏஐஜி மருத்துவமனைகளின் தலைவா் டாக்டா் நாகேஷ்வா் ரெட்டி ‘நமது நாட்டில் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசியதாவது: மருத்துவத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மருத்துவ சேவையில் மனிதநேயம், அன்பு, பரிவு ஆகியவற்றுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும்

மேலும் மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விளக்கினார். நோயாளிகளின் தரவுகளைப் பாதுகாத்தல், தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துதல், நெறிமுறைகளைப் பின்பற்றுதல், தகுதியான நிபுணர்கள் பற்றாக்குறை, மருத்துவ நிறுவனங்களின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்பத்தை பரவலாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன. எனவே, செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடனும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இளம் டாக்டர்கள் தங்களது மருத்துவ அறிவை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதுடன், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மருத்துவர்களின் பணிக்கு உதவும் தொழில்நுட்பமாக இருக்க வேண்டுமே தவிர, மனித அறிவுக்கு மாற்றாக இருக்கக் கூடாது. நோயாளிகளிடம் அன்பு, பரிவு, மனிதநேயத்துடன் அணுகும் மருத்துவப் பணியின் அடிப்படை அம்சங்கள் என்றும் மாறாது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு சந்திரா குழுமம் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவர் கனகவல்லி சண்முகநாதன், இயக்குனர்கள் டாக்டர் ராஜா சபாபதி, டாக்டர் ராஜசேகரன், நிர்மலா ராஜ சபாபதி, ரமா ராஜசேகர், மருத்துவா்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.