சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் வேளாண் புத்தாக்கத் தொழில்கள் தொடர்பான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’ கருத்தரங்கு திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
“விவசாயத்தைத் தொழிலாக்க, தொழிலை அடையாளமாக்க!” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற கருத்தரங்கில், 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 100-க்கும் மேற்பட்ட வேளாண் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
விழாவில் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மூலம் வெற்றி அடைந்த அருவி எக்கோ வெஞ்சர்ஸ் நிறுவனர் கலைச்செல்விக்கு ‘சிறந்த வேளாண் தொழில்முனைவோர் விருது’ வழங்கப்பட்டது. விவசாயத்தில் புதுமையான நடைமுறைகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதற்காக, கைமெர்டெக் நிறுவனர் ராகுல் பரமசிவம், கிரீன் காலர் அக்ரிடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனர் பத்மினி சம்பத், கிராப் இன்ஜின் நிறுவனர் செல்வவிநாயகம் மற்றும் மைக்கோ மேட்ரிக்ஸ் நிறுவனர் கௌதம் தாஸ் ஆகியோருக்கு ‘வேளாண் புதுமையாளர் விருதுகள்’ வழங்கப்பட்டன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் ரவீந்திரன் பேசுகையில், விவசாயத்தில் புதுமையான நடைமுறைகள், நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் ஆகியவை அவசியமாக இருக்கின்றன. இவற்றில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன.
அறுவடைக்குப் பின் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில், பலரும் சிறுதானியங்களில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் மசாலாப் பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் மதிப்புக்கூட்டலில் பெரிதும் ஈடுபடுவதில்லை. இதில் பூச்சிக் கொல்லி மருந்துகளின் எச்சங்கள் இருப்பதன் காரணமாக, பெரும்பாலும் ஏற்றுமதி வாய்ப்புகளை இழக்கிறோம். இதனைத் தவிர்க்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கலாம் என்றார்.

அகவெலி ஆர்கானிக்ஸ் நிறுவனர் அஜாய்ராஜா பேசுகையில், ரசாயனப் பயிர் ரகங்கள் மற்றும் உரப் பயன்பாட்டால் விளைபொருட்களில் 42% அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் முன்பு 2 இட்லி சாப்பிட்ட இடத்தில், இப்போது 4 இட்லி சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், மரபு அரிசி மற்றும் சிறுதானியங்களில் இந்தச் சிக்கல் இல்லை. ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.
ஆகையால், நஞ்சு இல்லாத ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய மரபு அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுப் பொருட்களை உருவாக்கினோம். ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் கொடுக்கத் தொடங்கினோம். நல்ல தின்பண்டங்களும் ஆரோக்கியமான உணவும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் மக்களிடம் இருக்கிறது. இதில் மிகப்பெரிய தொழில் வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்.
பிரிஷிகோ ஃபுட்ஸ் நிறுவனர் சிந்துஜா வெற்றிச்செல்வன், தினை சாக்லேட் ஸ்பிரெட் தயாரிப்பு மூலம் மாதம் ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டும் வழிகளைப் பகிர்ந்துகொண்டார். ஊர்மணம் ஃபுட்ஸ் நிறுவனர் தீபா பாரம்பரிய உணவுத் தொழில் மூலம் மாதம் ரூ.2 லட்சம் வருமானம் ஈட்டுவது குறித்தும் எடுத்துரைத்தனர்.
