உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் ‘பி’ பிளாக் தரைத்தளத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மருத்துவமனை தலைவர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார். அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்கள் இதனை பார்வையிடலாம்.

5.b scaled

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், சுய மார்பக பரிசோதனை செய்யும் முறை, மேமோகிராபியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், கீமோதெரபி சிகிச்சை குறித்த அச்சங்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை தொடர்பான தவறான கருத்துகளை போக்கும் வகையிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மார்பக மறுசீரமைப்பு மற்றும் சிகிச்சைக்குப் பிறகு கைகளில் ஏற்படும் ‘லிம்பிடீமா’ எனப்படும் வீக்கத்தை தடுப்பது குறித்தும் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளது.

8a scaled

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறுகையில், மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறந்த பலன்களை பெற முடியும். நவீன சிகிச்சை முறைகள் மூலம் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்றார்.