ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் வெர்டிகுர்ல் நிறுவனம் இணைந்து, கல்லூரி வளாகத்தில் புதிய ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மையத்தை தொடங்கியுள்ளன.
‘கல்வியையும் நிறுவன பொறியியலையும் இணைத்தல்’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன், வெர்டிகுர்ல் நிறுவனத்தின் மூத்த மேலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் மனிதவளப் பிரிவு இயக்குனர் சிரில் மைக்கேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய மையத்தின் முக்கிய நோக்கம், மாணவர்கள் கல்லூரியில் கற்றுக்கொள்ளும் பாட அறிவுக்கும், தொழில்துறையில் எதிர்பார்க்கப்படும் நடைமுறை திறன்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதாகும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி, நிறுவன வல்லுநர்களின் நேரடி வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
