தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ‘பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம்’ நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பண்ணை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே பார்த்தீனியத்தின் தீய விளைவுகள் மற்றும் அதன் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 16 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மூலம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டன. அப்போது அவர்களுக்குப் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பண்ணைப் பணியாளர்களுக்கான பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு முகாம், ஆகஸ்ட் 17 அன்று வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கிழக்கு பண்ணையில் நடைபெற்றது.
பயிர் மேலாண்மைத் துறை இயக்குநர் (பொறுப்பு) ராஜ்குமார் தலைமை தாங்கி. பார்த்தீனியம் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் கூறினார். உழவியல் துறை தலைவர் கிருஷ்ணன் ஒருங்கிணைந்த பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்து பேசினார்.
பார்த்தீனியம் பரவும் விதம், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் மீது அது ஏற்படுத்தும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் ஒருங்கிணைந்த பார்த்தீனியம் மேலாண்மை முறைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
பண்ணைப் பணியாளர்களுக்குப் பார்த்தீனியத்தைக் கொண்டு மட்கிய உரம் தயாரிக்கும் தொழில்நுட்பமும் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. ஆகஸ்ட் 22 வரை இத்தகைய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.
