கோவையில் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி வரும் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை நடைபெற உள்ளது.
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் போட்டியின் 2வது சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சி ஜென்னிஸ் கிளப்பில் நடைபெற்றது. இதனை ஈக்வெஸ்ட்ரியன் லீக் ஆலோசகரும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வு ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவர் சக்தி பாலாஜி தலைமையில் நடைபெற்றது. போட்டி, வெள்ளானைப்பட்டியை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி பவர் ஹவுஸ்’ மைதானத்தில் நடைபெறுகிறது. சுமார் 6,000 பேர் அமரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிப்பறைகள், குடிநீர், பாதுகாப்பு மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2வது சீசனில், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவின் 6 மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்துள்ள அணிகள் பங்கேற்கின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை புல்ஸ், கேரளாவைச் சேர்ந்த பெகாசஸ் ஸ்போர்ட்ஸ், தெலங்கானாவைச் சேர்ந்த கோல்கொண்டா சார்ஜர்ஸ், கர்நாடகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெங்களூரு நைட்ஸ், கோவாவைச் சேர்ந்த குவாண்டம் ரெயின்ஸ் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் ஆகிய அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த லீக்கில் பாரத் மனோகரன், சூர்யா, பாலமுருகன், ஸ்ரேஷ்த், பாலாஜி விஜயசங்கர், ஹாஷினி, அவிக் பாட்டியா, நீல் கெண்டல், கிரண், ஹர்சித் மற்றும் ஆராதனா உள்ளிட்ட முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
குதிரை தடை தாண்டுதல் போட்டிகள், 110, 120 சென்டிமீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெறும். போட்டியாளர்களின் செயல்பாடுகளை, புது தில்லியைச் சேர்ந்த சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் மதிப்பீடு செய்ய உள்ளனர். மேலும், ஷார்ஜாவைச் சேர்ந்த போட்டிப் பாதை வடிவமைப்பாளர் போட்டிக்கான பாதையை வடிவமைக்க உள்ளார். இந்த லீக்கில் மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
தொடக்க விழாவில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். போட்டியை இலவசமாகக் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை Ticketprix.com இணையதளம் மூலம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு: 89258 04911.
