கோவையை சேர்ந்த 29 வயது இளைஞர் ஜீவா முருகேசன், இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களிடம் பேசுவதிலும், மின்னணு பொருட்களின் சிறப்பம்சங்களை விளக்குவதிலும் ஆரம்பத்தில் சிரமப்பட்ட ஜீவா, சாம்சங் தோஸ்த் பயிற்சியின் மூலம் தனது தகவல் தொடர்பு மற்றும் விற்பனைத் திறனை மேம்படுத்தியுள்ளார்.

இந்த திட்டம் சாம்சங் இந்தியாவின் சமூகப் பொறுப்புணர்வு திட்டமாகும். இது இளைஞர்களுக்குத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களையும், நடைமுறை வேலை அனுபவத்தையும் வழங்கி, ரீடைல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது. இத்திட்டம் இந்தியா முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேம்படுத்தியுள்ளது.

கற்பதில் அவர் காட்டிய ஆர்வத்துக்காகவும், தொழில்முறை வளர்ச்சிக்காகவும் குருகிராமில் உள்ள சாம்சங் இந்தியாவின் பிராந்திய தலைமையகத்தில் ஜீவா சமீபத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இது குறித்து ஜீவா கூறுகையில், ஆரம்பத்தில், என்னால் வாடிக்கையாளர்களிடம் சரியாகப் பேசவோ, பொருட்களைப் பற்றி விளக்கவோ முடியவில்லை. அதனால் அவர்கள் சென்றுவிடுவார்கள், என் மேலாளர் என்னைத் திட்டுவார்.

தோஸ்த் பயிற்சிக்குப் பிறகு, நான் பொருட்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களிடம் அது குறித்து தெளிவாக எடுத்துக்கூறி விற்பனையை வெற்றிகரமாக முடிக்கத் தொடங்கினேன். இப்போது, என் மேலாளர் என்னை முழுமையாக நம்புகிறார். நான் ஒரு வாடிக்கையாளரைக் கவனித்தால், கண்டிப்பாக அந்த விற்பனையை முடித்துவிடுவேன் என்று அவர் உறுதியாக நம்புகிறார் என்று ஜீவா கூறினார்.

தமிழ்நாட்டில் சாம்சங் தோஸ்த் மூலம் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற 865 இளைஞர்களில் அவரும் ஒருவர். இந்த ஆண்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட 30 சிறந்த பயிற்சியாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சாம்சங் தோஸ்த் விற்பனை திட்டம் வகுப்பறைப் பயிற்சியோடு சேர்த்து, நேரடி ரீடைல் அனுபவத்தையும் வழங்குகிறது. இது இளைஞர்கள் வேலை செய்யும் இடத்தில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.