நடிகர் தனுஷ் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் சமீபத்தில் வெளியாகின. தற்போது அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத் தலைவர் சுப்ரமணியம் சிவா, அனைத்திந்திய செயலர் ராஜா ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை வடக்கு தொகுதி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, கோவை சிங்காநல்லூர் தொகுதி கோவை சூலூர் தொகுதி, கோவை மேட்டுப்பாளையம் தொகுதி மேற்கண்ட 5 தொகுதிகளுக்கு உட்பட்ட தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும், உறுப்பினர் சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவர் G. சங்கரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் தொகுதி, கிணத்துகடவு தொகுதி, பொள்ளாச்சி தொகுதி, வால்பாறை தொகுதி ஆகியவற்றில் தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் தொடங்கவும் உறுப்பினர் சேர்க்கவும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சதீஸ்குமாரை தொடர்பு கொள்ள வேண்டும். தனுஷ் வழியில் ஒன்றுபட்டு அனைவரும் செயல்படுவோம்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகராக இருந்து அரசியலுக்குள் வந்து மிகப்பெரும் வெற்றி கண்டவர்களில் தமிழகத்தில் முதலிடத்தில் எம்ஜிஆர் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக அந்த மாபெரும் வெற்றி வாய்ப்பை பெற்றவர் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய்.

இந்நிலையில் தனுசுக்கும் இந்த ஆசை வந்திருக்கிறது என்று அரசியலில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனுஷ் முன்னெடுக்கும் அரசியலானது அவருடைய முன்னாள் மாமனாரை போல ஆன்மீகம் கலந்த அரசியலாக இருக்கும் என்று அறிகுறிகள் தென்படுவதாக விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.