கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின், விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் கிடந்ததாகக் கூறி, மாணவர்கள் நேற்று நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை – பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் இந்த தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு, விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது, உணவில் புழுக்கள், பூச்சிகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து விடுதி காப்பாளர், உணவகப் பொறுப்பாளர்களிடம் உடனடியாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நிர்வாகத் தரப்பில் உரியப் பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்திற்குள் திரண்டு திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவை வழங்கி மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என முழக்கங்களை எழுப்பியதால் நள்ளிரவில் பரபரப்பான சூழல் நிலவியது.
சம்பவ இடத்திற்கு வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உணவின் தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
