கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில், சுமார் 1,300 டன் உரம் ரயில் மூலம் கோவை கூட்ஷெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மானிய உரங்கள் விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளதால், உர மூட்டைகளை லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விவசாயத்தின் முக்கிய பருவமான நிலையில் உரத் தேவையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ரயில் மூலம் அதிகளவிலான உரம் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை கூட்ஷெட் இறக்குமதி குடோனில் இறக்கி வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை மையங்கள் வழியாக விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
கோவை மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் இந்த உரம் விநியோகிக்கப்பட உள்ளதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உரம் ஏற்றிய ரயில் கோவை கூட்ஷெட் இறக்குமதி குடோனை வந்தடைந்துள்ளதாகவும், தற்போது கூட்ஷெட்டில் நிலவும் சில நடைமுறை சிக்கல்களால் உரங்களை விரைந்து விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சக்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பாண்டியன் கூறுகையில்: “விவசாயிகளுக்கு உரம் தாமதமின்றி சென்றடைவது மிகவும் அவசியம். கூட்ஷெட்டில் உர மூட்டைகளை கிளியரிங் செய்வது மற்றும் லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகள் விரைவாக நடைபெற சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உரங்களை காலதாமதமின்றி விநியோகிக்க முடியும் என்றார்.
