சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி-2026 நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவ மாணவியரின் ‘பெருந்திரள் புத்தக வாசிப்பு’ நடைபெற்றது.

சுமார் 800 மாணவ மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தனர்.
காரமடை சிக்காரம்பாளையம் மேனாள் கிராம பஞ்சாயத்துத் தலைவரும், சமூக சேவகருமான ஞானசேசகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பள்ளி நூலகத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்தி நூல்களைத் தொடர்ந்து படித்துவரும் மாணவ மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர் பேசுகையில்: தினமும் குறிப்பிட்ட நேரம் புத்தகம் வாசிப்பதால் நல்லொழுக்கம், தொடர் கற்றல், மொழி ஆளுமை, கற்பனைத் திறன் மற்றும் சிந்தனை ஆற்றல் வளரும்.

அதிகத் தகவல்களை அறிந்து கொள்வது தன்னம்பிக்கையையும், மன ஒருமைப்பாட்டையும் வளர்த்து நம்மைச் செதுக்க உதவும். வாசிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று பேசினார்.
காரமடை சௌமியா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சதீஸ்குமார் பேசுகையில்:
புத்தக வாசிப்பு பரந்த சிந்தனையையும் புதிய கனவுகளையும் உருவாக்குகிறது.
நாம் திரும்பத் திரும்பச் செய்யும் வாசிப்புப் பழக்கம் நமது நடத்தையாகவும், குணமாக்கும் உயர்ந்து, இறுதியில் எதிர்காலத் தலையெழுத்தையே தீர்மானிக்கிறது என்று பேசினார்.
நிகழ்விற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன், தலைமை தாங்கி பேசுகையில்: வாசிப்பு என்பது தேர்வுக்காக மட்டும் படிப்பது அன்று; அதில் அறிதல், புரிதல், சிந்தித்தல், உணர்தல், செயல்படுத்துதல் என ஐந்து நிலைகள் உள்ளன. படித்ததை வாழ்வில் செயல்படுத்துவதே முழுமையான அறிவாகும்.
பயன்முறையில் இல்லாத அறிவு செல்லாத பணத்திற்குச் சமம். சாதனையாளர்கள் அனைவரையும் செதுக்கியது புத்தகங்களே. படித்ததன் சாராம்சத்தை வாழ்வில் பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றியை அடையலாம் என்று பேசினார்.

நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
