டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைக்காக கோவை மாநகராட்சி சார்பில் சுகாதார பணிகள் மாநகரின் 5 மண்டலங்கள் முழுக்க துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றியும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் சுகாதார பணிகளை மாநகராட்சி இவ்வாறு செய்து வரும் நிலையில், சில பகுதிகளில் பொது இடங்களிலேயே கழிவு நீர் தேங்கும் நிலை உள்ளது கவலையளிக்கிறது.
கோவை காந்தி மாநகரில் இருந்து எப்.சி.ஐ. குடோன் நோக்கி செல்லக்கூடிய வழியில் சாலை ஓர மீன் இறைச்சி விற்பனை கடை ஒன்று செயல்படுகிறது. இந்த சாலையோர கடையிலிருந்து குறுகிய தூரத்திற்கு குழி வெட்டி, செயற்கையாக சாக்கடை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த சாக்கடையில் சேரும்படி வழி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கடை செயல்பட்டாலும் படாவிட்டாலும் பல நாட்களாக இதில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும், இந்த சாக்கடை நீரில் ப்ளீச்சிங் பவுடர் மிக அதிக அளவில் போடப்பட்டுள்ளது. ப்ளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின், கால்சியம் அதிக அளவில் நிலத்துக்குள் செல்வது, நிலத்தடி நீருக்கு ஆபத்து.
பல நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அதிக அளவில் ப்ளீச்சிங் பவுடர் போட்டிருப்பது அங்கு சென்று பார்த்தாலே தெரியும். மீன் இறைச்சி கழிவு வாடையும், ப்ளீச்சிங் பவுடர் நாற்றமும் அவ்வழியே கடக்கும் போது ஆளை அப்படியே தூக்கும் பாருங்கள்!
இதுபோன்ற புது சாக்கடைகளை சாலை ஓரங்களில் அமைந்துள்ள கடைகள் தங்கள் விருப்பம் போல ஏற்படுத்திக்கொள்ளமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற சிலரின் செயல்களால் மாநகராட்சி தரப்பில் எடுக்கப்படும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் சில பகுதிகளில் வீணாகக் கூடும்.

