பரபரப்பான சாலைகளாக கோவை மாநகரில் அறியப்படுபவைகளில் ஒன்று அவிநாசி சாலை. இதன் பல இடங்களில் சமீப நாட்களாக ‘ஒன்-வே’ எனப்படும் தவறான வழியில் வாகனஓட்டிகள் பயணிப்பது அதிகரித்து வருகிறது.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், பயனீர் மில் ரோடு மற்றும் விளாங்குறிச்சி சாலையில் இருந்து அவிநாசி சாலை-எஸ்ஸோ பங்க், நவ இந்தியா நோக்கி செல்லும் 2 இருசக்கர வாகனஓட்டிகள் (குறிப்பாக உணவு விநியோகம் செய்யும் சிலர்) ‘ஒன்-வே’ யில் பயணிக்கின்றனர்.
இவர்களை தவிர பிற வாகனஓட்டிகள், தாங்கள் செல்லவேண்டிய இடம் சாலையின் மறுபுறம் உள்ளதென்றால், அதற்கு முறையாக செல்லாமல், யு-டர்னை தவறாக பயன்படுத்துகின்றனர். இத்துடன் செல்போன் பேசி வாகனங்களை இயக்குவோர், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக சாலையில் வாகனம் ஓட்டுவோர் என விதவிதமான சாலை விதிமீறல்கள் அவிநாசி சாலையில் அரங்கேறுகிறது.
ஒருபக்கம் கோவை மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்ற போக்குவரத்து போலீசார், தனியார் அமைப்புகள் முயற்சிகள் எடுத்து வந்தால், மற்றொரு பக்கம் சாலை விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
பாதுகாப்பான சாலை பயணம் குறித்தும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவை அவிநாசி சாலையில் ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சுமார் 50 மாணவ, மாணவிகள், நவ இந்தியா – பீளமேடு வரை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும் என மனித சங்கிலி அணிவகுப்பில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



