கடந்த ஆட்சியில் முடங்கிப்போன கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டத்தை மீண்டும் துவங்க த.வெ.க. தலைமையிலான தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரியில் ரூ.168 கோடி மதிப்பில் வெள்ளலூர் பகுதியில் உள்ள 61 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவர முடிவு செய்து பணிகள் நடைபெற்று வந்தது. ரூ.50-54 கோடி அளவுக்கு கோவை மாநகராட்சி நிதி செலவு செய்து இந்த பேருந்து நிலையத்தை கட்டிவந்தது. 2021 திமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கு காலத்தின் போது திட்டத்தில் பணிபுரிந்த கட்டுமான பணியாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர், அதன் பின் பணிகள் வேகமெடுக்கவில்லை.

இதன் பின்னர் திட்டத்திற்கு தேவைப்படும் அணுகசாலை அமைப்பதில் சிக்கல் இருக்கிறது என்பது உள்ளிட்ட சில காரணங்களால் மீண்டும் துவங்காமல் கட்டின கட்டிடம் அப்படியே பாதியில் நின்றது. இந்த நிலையில் த.வெ.க. ஆட்சி அமைந்ததும் வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியது.

தற்போது நகராட்சி நிர்வாக இயக்குனரகத்திடம் வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டத்தினுடைய புதுப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையும் அத்துடன் சேர்த்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.

1972 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோவை மாநகராட்சியின் மத்திய பேருந்து நிலையம் தினசரி 30,000 மேற்பட்ட பயணிகளை கையாள்கிறது. இந்தப் பேருந்து நிலையம் மூலம் மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், அவிநாசி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு மக்கள் பயணிக்கின்றனர்.

இந்தப் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க கோவை மாநகராட்சி ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் நேரில் கலாய்வு செய்தனர்.

அதை எடுத்து ரூ.30 கோடியில் இந்த வளாகத்தை இடித்து புதிதாக கட்டி எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. 90 பஸ் பே பகுதிகள் உடன் 2000 இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் பயணிகளுக்கென பல்வேறு வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.